நம்மில் பலருக்கு ஒரு உண்மை தெரியாது.இன்று ஆஸ்திரேலியா அணிக்காக சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருக்கும் ஸ்டீவ் ஸமித், ஆஸி அணிக்கு சுழற்பந்து வீச்சாளராக வந்தவர். ஷேன் வார்னேயின் ஓய்வுக்கு பின்பு சரியான சுழற்பந்து வீச்சாளர் இல்லாத கஷ்டத்தை போக்கும் நோக்கில் வந்தவர் பின்னாளில் மைக் ஹஸ்ஸியின் இடத்தை நிரப்புவார் என்று யாருமே நினைத்து இருக்க மாட்டோம்.
2008 உள்ளூர் போட்டித் தொடரில் அறிமுகமான ஸ்மித், 2009-2010 தொடரில் 13 போட்டிகளில் சராசரியாக 50 ரன்களைக் குவித்தார். ஆனாலும் அவர் சரியாக பந்து வீசவில்லை என்று ஒரு விமர்சனம் இருந்து வந்தது. வார்னேவிடம் நேரடியாக பந்து வீச்சுப் பயிற்சி பெற்று வந்த ஸ்மித், அதே ஆண்டின் கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை சாய்த்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். 2010 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு முதன்முதலாக ஆஸி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அந்த தொடரில் 11 விக்கெட்டுகளை எடுத்து பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2010ஆம் ஆண்டு தன்னுடைய முதல் டெஸ்டில் விளையாடியவர், அந்த போட்டியில் 77 ரன்களை குவித்து தன்னால் பேட்டிங் செய்யவும் முடியும் என நிரூபித்தார்.
அதன் பின்பு 2013ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக மொகாலியில் நடந்த டெஸ்ட் போட்டியில் மற்ற ஆஸி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மித் மட்டும் தனியாக நின்று இந்திய சுழற் பந்து வீச்சாளர்களை திறம்பட சமாளித்து 92 ரன்களை குவித்து அசத்தினார். இந்த ஒரு இன்னிங்ஸ் ஆஸ்திரேலியர்களால் இன்றளவும் வியந்து பேசப்படுகிறது. இதன் மூலம் ஐபிஎல் இல் புனே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் திறம்பட செயலாற்றிய இவர், அந்த ஆண்டுக்கான சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்றார்.
இந்த ஆண்டுக்கான ஆஷஸ் தொடருக்கான அணியில் முதலில் ஸ்மித் சேர்க்கப்பட வில்லை. பின்பு வார்னருக்கு விதிக்கப்பட்ட தடையால் வாய்ப்பு பெற்ற இவர், ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்து இந்த தொடரில் ஆஸி அணியின் கிறிஸ் ரோஜர்ஸுக்கு அடுத்து ரன் குவிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார். அதிலும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் அவருடைய 138* அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஆண்டர்சன், பிராடு மற்றும் சுவான் போன்ற அனுபவமிக்க பந்து வீச்சாளர்களை எளிதாக சமாளித்து நேர்த்தியான ஷாட்களை ஆடி கிரிக்கெட் வல்லுநர்களை ஆச்சரியத்தின் உச்சத்துக்கு அழைத்துச் சென்றார்.அதிலும் இந்த இன்னிங்ஸ் ஆஸியின் பரம எதிரியான இங்கிலாந்துக்கு எதிராக வந்ததினால் இன்னும் சிறப்பானதாக பல நாட்களுக்கு அழியாத இடம் பிடித்திருக்கும்.
மேலும் பிக் பாஷ் லீக் தொடரில் சாம்பியன்களான சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு தன்னால் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட முடியும் என நிரூபித்து இருக்கிறார். இன்றைய இளம் வீரர்கள் டி20 விளையாடுவதிலேயே அதிக ஈடுபாடு கொண்டவர்கள் டெஸ்ட் போட்டிகளில் அவர்களால் சாதிக்க முடியாது என்ற பெரும்பாலோருடைய எண்ணத்தை மாற்றும் விதமாக இருக்கும் ஸமித்துடைய ஆட்டம் நிச்சயம் ஒரு புதிய சகாப்தத்துடைய துவக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
No comments:
Post a Comment